கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியமாக கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது . மேலும் பள்ளிகளில் மாணவர்கள் சுத்தமாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் அரசு பள்ளிகளில் தண்ணீர் இருந்தாலும் சோப்பு இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, சோப்பினை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பள்ளி கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் கைகளை சோப்பு போட்டுக் கழுவதற்கு தலைமையாசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். சோப்பினை வாங்குவதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது சிறப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் கைகளை சோப்புப் போட்டு கழுவுவதை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.