சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை செய்து வரும் பெண் ஒருவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருபவர்களுக்கு கரோனா கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனை முடிவில் பெண் தொகுப்பாளருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நுங்கம்பாக்கம் பெண்கள் விடுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த தெரு முழுவதும் வெளியாட்கள் செல்ல தடை விதித்து அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் சென்னை கோயம்பேட்டில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த 27 வயது நபருக்கு கடந்த சில நாள்களாக உடல் சோர்வாகவும், தலைவலி இருந்ததால் கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கரோனா தொற்று இருப்பதை கண்டறிந்தனர். மேலும் இவரது தாயார் கோயம்பேட்டில் பூ வியாபாரம் செய்து வருவதால் தினமும் அழைத்து சென்று விடுவது வழக்கம். இதனால் தாயாரை பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகி உள்ளது.
இதேபோல் அண்ணா நகரை சேர்ந்த ஒருவருக்கு, சிகிச்சை பார்த்த மருத்துவர் மூலம், துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றினால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா நிவாரணத்துக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கிய சிறுவன்!