புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மூலம் ஆயுஸ் கவாத் என்னும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பொட்டலங்கள் 10 ஆயிரம் காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காவல் துறையினருக்கு மருந்துப் பொட்டலங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”புதுச்சேரியில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் தற்போது இளைஞர்களின் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவில்லை எனில் தொற்று அதிகரித்து வருவதை எவரும் தடுக்க முடியாது. நோய்த் தடுப்பு முறைகளை அதிகப்படுத்தி வருகிறோம். ஒரு வாரத்திற்குள் நெட்டப்பாக்கம் பகுதியில் இயற்கை முறையில் சிகிச்சை மையம் அமைக்கப்படும்” என்றார்.
மேலும், பேசிய அவர், `ஆக்ஸிசன் உற்பத்தியை அதிகரிக்க புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனை, ஏனாம் பகுதியில் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 70 ஆக்ஸிசன் செறிவூட்டல், புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு 40 ஆக்ஸிசன் செறிவூட்டல் மத்திய அரசு வழங்கியுள்ளது.
மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து நோயை முற்றிலும் தடுக்க முன்வர வேண்டும்` என வேண்டுகோள் விடுத்தார்.