சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சில சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளிடம் கையூட்டு பெறப்பட்டதாகப் பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட இணை இயக்குநர் தலைமையில் கடந்த 19ஆம் தேதி அன்று, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் அனுமதிச் சீட்டு வழங்கும் இடம், மருந்து கட்டும் இடம், எக்ஸ்ரே எடுக்கும் இடம், ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த நேரத்தில் உள்நோயாளிகள் அனுமதிச் சீட்டு வழங்கும் இடத்தில் அப்பிரிவில் பணியாற்றும் ஒப்பந்த தினக்கூலி மருத்துவமனை பணியாளர் கையூட்டு பெற்றது நேரடியாகவும் மற்றும் அன்றையதினம் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விசாரணை செய்ததிலும் கண்டறியப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் புகார் உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக இணை இயக்குநர், அந்த சம்பந்தப்பட்ட ஒப்பந்த தினக்கூலி மருத்துவமனை பணியாளரைப் பணி நீக்கம் செய்தார்.
மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் இதுபோன்று கையூட்டு பெறும் மருத்துவமனை ஊழியர்கள் பற்றி உடனடியாக தலைமை மருத்துவ அலுவலர் அவர்களிடமோ (தொலைப்பேசி எண். 7358130804) மற்றும் இணை இயக்குநர் அவர்களிடமோ (தொலைப்பேசி எண். 7358122328) நேரடியாகவோ அல்லது தொலைப்பேசி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்று மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அநாகரிகத்தின் அடையாளம் ஹெச்.ராஜா' - திருமாவளவன்