தமிழ்நாட்டின் உள்ளாட்சித் துறை மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் துப்புரவுப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் நிரந்தர தொழிலாளர்கள் தவிர என்.எம்.ஆர். அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே 8,000 தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர்களுக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து துப்புரவுப் பணியிலிருக்கும் வடிவு என்பவர் கூறுகையில், ”இந்தப் பணியில் எங்களுக்குக் கிடைக்கும் வருமானம் உணவுக்கும், வீட்டின் வாடகைக்குமே போதவில்லை. இதனால் வேறு வழியின்றி தன் பிள்ளைகளும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், என்னைப் போல என் பிள்ளைகள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் குப்பை, சாக்கடை, சில நேரங்களில் மனிதக் கழிவுகளையும் அள்ளும் பணியில் ஈடுபடுகிறேன். இன்றைய நிலையில் போதிய வருமானம் இல்லாததால் என் பிள்ளைகளும் இதே துப்புரவுப் பணிக்கு வரும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும், தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மட்டுமே தங்களது வாழ்க்கைத் தரம் உயரும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: காதலர் தினக் கொண்டாட்டம் - அதிகளவில் ஏற்றுமதியாகும் மலர்கள்