வேலூர்: காட்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை பராமரிக்க கோரி ஸ்ரீராமலு என்பவர் தொடர்ந்த வழக்கில், நீர்நிலையில் விவசாயம் மற்றும் செங்கல் சூளை உள்ளதால், இந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்றி, நீர்நிலையை 2 மாதங்களுக்குள் குடிமராமத்து பணிகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், 3 மாதங்களில் இந்த நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அதன்பின்னர் நீர்நிலையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்று அப்போதைய வருவாய் துறை செயலாளர் சந்திரமோகன், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராமலு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை இதுவரை அகற்றவில்லை எனவும், கடந்த ஜனவரி 13ந்தேதி நீர்நிலை தொடர்பான காட்பாடி தாசில்தாரின் உத்தரவை மனுதாரர் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தாசில்தார் உத்தரவினால் மனுதாரர் ஏதேனும் பாதிக்கப்பட்டால், அவர் சட்டப்படி சம்மந்தப்பட்ட அமைப்பிடம் அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு முன்னாள் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு