சென்னை: கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தை விட்டு வெளியில் அனுமதி இல்லாமல் மண் எடுத்துச் சென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை (வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள்) மேற்கொள்ள அடித்தளம் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் போது கிடைக்கப்பெறும் மண்ணை கட்டுமானம் நடைபெறும் பகுதியை விட்டு வெளியில் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் முறையாக விண்ணப்பம் செய்து, முன் அனுமதி பெற்று உரிய நடைச் சீட்டுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என கட்டட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
சட்டத்தின் படி குற்றம்
உரிய அனுமதியில்லாமல் மண்ணை எடுத்துச் செல்வது கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ன் படியும் மற்றும் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959இன் படியும் குற்றமாகும்.
இந்தச் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவோர் மீது நடைமுறையில் உள்ள விதிகளின் கீழ் குற்றவியல், அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8ஆவது தளத்தில் இயங்கும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி