சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரப்பானி தலைமையில் துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 2022-23 ஆண்டிற்கான நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சுமார் 2:30 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெல் கொள்முதல், நெல் சாகுபடி பரப்பு அதிகரிப்பது, நெல் உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், "நெல் கொள்முதல் தொடர்பான கருத்துகள் விவசாயிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துகளை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை மே மாதம் திறந்த காரணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
‘சன்ன’ ரக நெல்லை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும் . மக்கள் அதை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எனவே ‘சன்ன’ ரக நெல் அதிக அளவில் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் செயல் பாராட்ட கூடியதாக உள்ளது என கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பத்தாண்டு காலத்தில் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வீணானது. தற்பொழுது நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகளை கட்டி வருகிறோம்.
நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும்போது தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மூன்று ரூபாய் தொகையானது தற்பொழுது 10 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழ்நாட்டில் 103 இடங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும், 1 மாதத்தில் அதற்கான பணிகள் முடிவடையும். மற்ற அரசு அலுவலக கட்டடங்களில் நெல்லை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை தனியார் ஆலைகளுக்கு அனுப்ப திங்கள் கிழமை டெண்டர் விடப்பட உள்ளது. மேலும் வழக்கமாக ஆண்டு தோறும் அக்டோபர் 1 ம் தேதி தான் நெல் கொள்முதல் செய்வோம், ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதியே நெல்கொள்முதல் செய்யவுள்ளோம்.
அடுத்த ஆண்டு 5 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக குருவை சாகுபடி செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு 43 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை விட ,டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட உள்ளது. வியாபாரிகள் எங்கேயும் பயன் அடைய கூடாது. விவசாயிகள் தான் பயன் அடைய வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் வேளாண்மை அலுவலர் உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கும் தவறு நடந்து விடக்கூடாது என்பதில் முதலமைச்சர் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இன்னும் ஒராண்டு காலம் ஆகலாம்" என்றார்.
இதையும் படிங்க: அரசு விழாக்களுக்கு பள்ளி வாகனங்களைப்பயன்படுத்துவதா... திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்