சென்னை: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் பழ கருப்பையா இன்று அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக தீயசக்தி என்று சசிகலா சொல்லியிருக்கிறார், அதிலே எனக்கும் உடன்பாடுதான். ஆனால், அதிமுக நல்ல சக்தியா? ஒரு நல்லதொரு மாற்றம் வர வேண்டும் என நாங்கள் இருக்கிறோம்.
சிறிய கட்சிகள் தலைமைக் கட்சியிடம் பணம் வாங்குவது அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது. கோடிக்கணக்கில் பணம் வாங்குவது நல்ல அரசியல் இல்லை. வாக்காளர் பணம் வாங்குவதற்கு சில காரணங்கள் உண்டு. ஆனால், சிறிய கட்சிகள் தலைமைக் கட்சியிடம் பணம் பெற்றுக்கொள்வது எவ்வாறு நல்லா அரசியலாகும்? அது மட்டுமின்றி இப்படிச் செய்வதன் மூலம் எவ்வாறு ஊழல் ஒழியும். ஊழல் மூலம் சேர்த்துவைத்த பணத்தை கோடிக்கணக்கில் சிறிய கட்சிகளுக்கு வழங்குகிறது தலைமைக் கட்சி.
ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணைய வேண்டும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும். ஒருகாலத்தில் 104 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதே நேரத்தில் கருணாநிதியின் திமுக 104 இடங்களில் வெற்றிபெற்றது. இந்திரா காந்தி விட்டுத்தந்ததால் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.
104 இடங்களில் வென்ற காங்கிரஸ் தற்போது, 20 இடங்களுக்கு திமுகவிடம் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதே நிலை சென்றால் எதிர்காலத்தில் இதயத்தில் மட்டுமே காங்கிரசுக்கு இடம் இருக்கும். ஒரு தேசிய கட்சி இந்த நிலைக்குத் தள்ளப்படலாமா? எங்களுடன் வாருங்கள். முதன்மை யார் என்பதைப் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம்.
தற்போது, எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக மாறும் காலம் வரும். வாருங்கள் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம். மோடி ஆட்சிக்கு வர வேண்டாம் என்று நினைப்பவர்கள் எங்களை பி டீம் எனக் கூறுகிறார்கள்.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முக்கியமான காரணம் திமுகவில் 2 ஜி ஊழல். எனவே, அவர்கள்தான் பாஜகவின் பி டீம்; நாங்கள் அல்ல" என்றார்.
இதையும் படிங்க: 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்