மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்தும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று ராயப்பேட்டையில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் ஏற்கனவே தெரிவித்து இருந்தநிலையில், அவரால் சிலகாரணங்களால் கலந்துகொள்ளமுடியவில்லை. இதனையடுத்து ராஜசேகரன் தலைமையில் போராட்ட நடைபெற்றது, இதில் மத்திய அரசு மற்றும் மோடியை எதிர்த்து முழக்கம் எழுப்பப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜசேகரன் கூறுகையில், " புதிய வேளாண் சட்டத்தை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கு நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் விவசாயிகளுடன் இருப்போம் என கூறியிருக்கிறார்கள். அது போல நாங்களும் விவசாயிகளுடன் இருப்போம். நாங்கள் சிறு குறு தொழில் செய்யும் விவசாயிகளின் பின்னால் இருக்கிறோம். மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பின்னால் இருக்கிறார். விரைவில் இப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.