டெல்லி: மக்களவையிலிருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று(மார்ச்.26) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாளை தமிழக சட்டப்பேரவையில் ராகுல்காந்திக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும் என்றும், ராகுல்காந்திக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வர வேண்டும் என்றும், ராகுல்காந்திக்கு ஆதரவாக பேசுவதற்கு சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், இதை அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவதாக விமர்சித்திருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜகவினர் இது தொடர்பாக சூரத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுல்காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஒரு தியாகியின் மகனை துரோகி என்று கூறுவதா?" - பிரியங்கா காந்தி ஆவேசம்!