சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், தங்களது கட்சி, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகைதருகிறார்.
இவர் வரும் 28ஆம் தேதி சேலத்தில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.