சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 16 ரயில்வே காவலர்கள் குணமடைந்து இன்று பணிக்கு திரும்பினர். அவர்களை மத்திய ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்திரகுமார் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களில் 14 பேர் கரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்துள்ளதால் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கி கெளரவித்தார்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐஜி பிரேந்திரகுமார்,"ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 14 பேர் கரோனா வைரஸ் பிளாஸ்மா சிகிச்சை ரத்த தானம் செய்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை 67 ரயில்வே காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் இதுவரை 58 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.
மீதமிருக்கக் கூடிய 9 பேர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்கள். ரயில்வே பாதுகாப்பு படையில் பயிற்சி மேற்கொள்ளும் பெண் காவலர்களுக்கு பயன்படும் விதமாக பயிற்சி மையங்களில் தெற்கு ரயில்வேயின் ஆர்.பி.எப். வடிவமைத்த 15 நடமாடும் கழிப்பறைகளை அமைத்துள்ளோம்"என்றார்.
இதையும் படிங்க: கோவிட்-19: இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கியுள்ளது!