தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். 14 நாட்கள் இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் நீடிக்கும் என கூறப்படுகிறது. இதற்காக இன்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். முதலீட்டிற்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதால் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேனி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. ரவீந்திரநாத் குமார், அன்னிய முதலீட்டை கொண்டுவர இதுவரை எந்த முதலமைச்சரும் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றதில்லை. புது முயற்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான முதலீடுகளைப் பெற்றுத் தர செல்லும் அவரது பயணம் வெற்றிகரமான பயணமாக அமைய வாழ்த்துகள் என்றார்.