கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரத்துசெய்யப்படுவதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதனடிப்படையில், அரையாண்டுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தனியார் பள்ளிகள் மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுறுத்தலில், "மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து மட்டுமே தேர்வுகளை நடத்த வேண்டும். அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடாது. தேர்வுக்காகத் தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!