சென்னை: ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு மாநில சுயாட்சிக்கு ஆதரவாக திமுகவின் குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பின் பின்னணியில் இது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வய்ந்ததாக கருதப்படுகிறது.
திராவிட நாடு கோரிக்கை
'மத்திய அரசுக்கு என்று தனியாக வாக்குவங்கி ஏதும் இல்லை, மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற ஒன்றியம் இல்லை', என்ற தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனின் பேச்சு இந்த விவாதத்திற்கு புதிய அழுத்தம் கொடுத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில், மாநில சுயாட்சி திமுகவின் முக்கிய பேசுபொருளாக அமைந்தது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் அறிஞர் அண்ணா காலம் தொட்டு, கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்று உள்ள திமுக மாநில சுயாட்சி கொள்கையில் திண்ணமாக செயல்படத் தொடங்கி உள்ளது.
கடந்த 1957ஆம் ஆண்டு முதல் திமுக வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் கூட்டாட்சி குறித்த நிலைப்பாடு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 1960ஆம் ஆண்டு முதல் மாநில சுயாட்சி குறித்த விவாதம் திமுக மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இடம்பிடித்து விடும். திராவிட நாடு கோரிக்கை பலமாக முன்னெடுத்து வந்த நிலையில். 1963ஆம் ஆண்டு அரசியலைப்பு சட்டத்தின் 16ஆவது பிரிவு திருத்தம் செய்யப்பட்டு, பிரிவினைவாதம் குற்றமாக்கப்பட்ட பின் அந்த கோரிக்கையை முற்றிலுமாக கைவிட்டு விட்டது. ஆனாலும், 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டங்களை திமுக தீவிரமாக முன்னெடுத்தது, இருமொழி கொள்கையில் உறுதியாக இருந்தது.
மாநில சுயாட்சி எனும் உரிமைக்குரல்
மாநில சுயாட்சி முழக்கம் நடந்து முடிந்த தேர்தலில் முக்கிய பங்காற்றியது. குறிப்பாக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது, நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்துவது, மாநிலங்களுக்கு உரிய நிதிப்பங்கீடு என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கடந்த சில தேர்தலைகளை விட மாநில சுயாட்சி குறித்த முழக்கம் மக்களிடையே பலமாக பேசப்பட்டது. பிராந்திய கட்சியை, அதுவும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சியைத் தேர்ந்தெடுப்பது என தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க கூடிய கட்சியை தமிழ்நாடு மக்கள் தேர்ந்து எடுத்துள்ளனர்.
நீட், உதய் மின்திட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டதிட்டங்களின் வழியே மாநில அரசுகளுக்கு இருந்த உரிமைகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசை தவிர்த்து, கடந்த முறை ஆளுநர் தன்னிச்சையாக மாவட்டங்களில் ஆய்வுகளை நடத்தி திட்டபணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். திமுக இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தது.
ஒன்றிய, மாநில அரசுகள் இடையேயான உறவு
கருணாநிதி அரசு, 1969ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் மூலம் கூட்டாட்சி குறித்து ஆராயவும், மாநிலங்கள் அதிக சுயாட்சியை பெறுவதற்கான திருத்தங்களை பரிந்துரைக்க பி.வி. ராஜமன்னார் குழுவினை அமைத்தது. 1971ஆம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் கூடிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், மாநிலங்களுங்கிடையான சிக்கல்களை பேசித் தீர்க்க மாநிலங்களிடையேயான கவுன்சில் அமைப்பு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தக் குழு, ஒன்றிய அரசு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களைப் பாதிக்கக்கூடிய சட்டங்களை கவுன்சிலை கலந்து ஆலோசிக்காமல் செயல்படுத்தக்கூடாது எனவும், குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய சேவைகளை ரத்து செய்யவும் அது பரிந்துரை செய்தது. இருப்பினும் அப்போதைய ஒன்றிய அரசு அந்த அறிக்கையை நிராகரித்தது. ஆனால், 1983ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அமைத்த சர்காரியா ஆணையம் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்தது.
அதிகார குவிப்பை நோக்கி நகரும் பாஜக
கடந்த 1974ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் சுயாட்சி கோரும் தீர்மானத்தை திமுக நிறைவேற்றியது. அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தது. உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது. 1996 முதல் 2014ஆம் ஆண்டுவரை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின் மூலம் காங்கிரஸ், பாஜக ஆட்சி செய்தன. 2014 முதல் தற்போது வரை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருவதால் அதிகார குவிப்பை நோக்கி நகர்வதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மே 10ஆம் தேதி ஆலோசனை நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீட் தேர்வை ஒழித்து விட்டுத்தான் மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
அதே போல் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உலக அளவில் அதிகரித்து வரும் அதிகாரப் பகிர்வின் அனுபவத்திலிருந்து வேறுபட்ட நிலையில், இந்தியா எதிர்திசையில் செல்கிறது. அதாவது, ஒன்றிய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் அதிக அளவில் குவிந்து உள்ளன, மத்திய அரசுக்கு என்று தனியாக வாக்காளர்கள் இல்லை, ஜிஎஸ்டி வரியை பகிர்ந்து அளிப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது என காட்டமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். காலியான கஜனாவுடன் ஆட்சியைத் தொடங்கியிருக்கும் திமுகவின் இந்த நிலைப்பாடு, மீண்டும் மாநில சுயாட்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுப்பதாகவே உள்ளது.
இதையும் படிங்க: இந்திய வளர்ச்சிக்கு மூலதனமாகும் கூட்டாட்சி கட்டமைப்பு!