வேலூர் ஆயுதப்படை காவலரான சிவக்குமார், 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை வெளியில் அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்ததாகவும் 2005ஆம் ஆண்டு இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதை விசாரித்த வேலூர் ஆயுதப்படை டி.எஸ்.பி, பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்றும், ஏமாற்றியது மட்டும் நிரூபணமாகியிருப்பதாக அறிக்கை அளித்தார்.
இந்த அறிக்கையை ஏற்க மறுத்த வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர், காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவக்குமாருக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உறுதி செய்ததை எதிர்த்து, சிவக்குமார் மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, பாலியல் வன்புணர்வு செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, கட்டாய பணி ஓய்வு அளித்து எஸ்.பி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும் இந்த வழக்கை ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரிக்க வேண்டுமெனவும், இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து குறைந்த தண்டனை விதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட நாளிலிருந்து 50 விழுக்காடு ஊதியத்தை பெற மனுதாரருக்கு உரிமையுள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க...சர்ச்சைக்குரிய தீர்ப்பு- நீதிபதி புஷ்பா கணேடிவாலா நிரந்தர நீதிபதி பரிந்துரை வாபஸ்!