சென்னை: சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட "இ-டாய்லெட்களை" காணவில்லை என மாமன்றக் கூட்டத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று (ஜன.30) நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தின்போது, பேசிய கணக்குக் குழு தலைவர் தனசேகரன், 'ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் (Swachh Bharat Mission Urban 2.0) 348 இ-டாய்லெட்கள் (E-Toilets) கட்டுவதற்கு, 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றன. தற்போது அந்த இ-டாய்லெட்களை எங்கேயும் காணவில்லை' என குற்றம்சாட்டினார்.
இ-டாய்லெட்கள் நிலை என்ன? தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேடு மற்றும் முறையாக பராமரிப்பு இல்லாததால், கட்டப்பட்ட சில இ-டாய்லெட்களும் சீர்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் ஆங்காங்கே உள்ளன. கடந்த ஆட்சியில் ஸ்வச் பாரத் நிதியை கொள்ளை அடிக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இ-டாய்லெட்கள் நிலை என்ன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து அடுத்த மாமன்றக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீண்டும் ஒப்பந்தத்தில் பங்கேற்காத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்: இதுகுறித்து விளக்கமளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 'சென்னையில் 2014ஆம் ஆண்டு முதல் இ-டாய்லெட்கள் 144 இடங்களில் அமைக்கப்பட்டன. தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இ-டாய்லெட்களை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து டாய்லெட்களை சரிசெய்ய அறிவுறுத்தி, 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகளைக் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிதாக கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்கள் 358 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் கிடைக்கப்பெறும் இடங்களில் எல்லாம் கட்டமைக்க திட்டமும் உள்ளது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக சென்னையில் கழிப்பறைகள் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர்' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குளிர்கால நோய்கள் வராமல் தடுக்க டிப்ஸ்!