சென்னை: வக்பு வாரியத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் நேற்று (ஜனவரி 30) புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ரகுமான், "தமிழ்நாட்டின் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதை மீட்கும் பணிகளில் வக்பு வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சமூக விரோத கும்பல் ஒன்று பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. வக்பு வாரியத்திற்கு கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் போல வக்பு வாரிய மீட்பு குழு, வக்பு வாரிய சொத்துக்களை காப்போம் போன்ற பெயர்களில் 7 அமைப்புகளை உருவாக்கி, சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சொத்துகள் மீட்பு நடவடிக்கையில் வக்பு வாரியம் ஈடுபட்டு வருவதால், தங்களது பெயர்களை கெடுக்கும் நோக்கில் சிலர் அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை தகுந்த ஆவணங்களின் அடிப்படையிலேயே மீட்டெடுக்க உள்ளோம். இதை ஏற்க மறுப்பவர்கள் வக்பு வாரியத்தை அனுகி தெரிந்து கொள்ளலாம்” என கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலை கீழ் செயல்படும் வார் ரூம் மீது நடிகை காயத்ரி ரகுராம் புகார்!