காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, நேற்றைய முன்தினம்(அக்.12) பாஜகவில் இணைந்த குஷ்பு சென்னை விமான நிலையத்தில் நேற்று(அக்.13) பத்திரிகையாளர்களிடம் பேசும்போது காங்கிரஸ் கட்சி ’மூளை வளர்ச்சி இல்லாத கட்சி’ என்று பேசினார்.
இந்தகருத்து மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்றும் அதற்கு குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் குஷ்பூ இதுவரை அதற்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்காததால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆன்லைன் மூலம் அவர் மீது புகாரை பதிவு செய்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கத்தின் பொதுச்செயலாளர் நம்புராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ”குஷ்பூ தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள அவருடைய கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 பிரிவு 92(a)ன்படி, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பாஜகவில் குஷ்பூ: பிளான் என்ன?