விஜய் நடித்த 'ப்ரண்ட்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமானை குற்றஞ்சாட்டி அடிக்கடி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் சீமானின் ஆதரவாளர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்று அதை வீடியோவாகவும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், விஜயலட்சுமி, அவரது மேனேஜர் இணைந்து கொலை மிரட்டல் விடுப்பதாக விஜயலட்சுமி தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சமீர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கடந்த இரண்டு வருடமாக நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த 7 மாதங்களாக வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் வாடகை பணமான ரூபாய் 3 லட்சத்தை விஜயலட்சுமியிடம் கேட்டதற்கு மேனேஜர், அடியாட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்" என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.