சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார். இவர் அமமுக கட்சியில் இணைந்து வேளச்சேரியின் முன்னாள் கவுன்சிலர் சரவணனுடன் இணைந்து அமமுக கட்சிப்பணிகளை செய்துவந்தார். சில நாட்களுக்கு முன்பு இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
இதனிடையே, நேற்று( செப்-23) குருநானக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுகுமார் கலந்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த, வேளச்சேரி முன்னாள் கவுன்சிலர் சரவணன், செல்போன் வாயிலாக சுகுமாரிடம், தனக்கு எதிரான கட்சியில் பணியாற்றக்கூடாது மரியாதையாக அமமுகவில் இணைந்துவிடு என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு சுகுமார் மறுப்பு தெரிவித்ததால், தனது மகனை ஆட்களை வைத்து தாக்கியதாக சுகுமாரின் தாயார் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், முன்னாள் கவுன்சிலர் சரவணன் செல்போனில் சுகுமாரை மிரட்டிய ஆடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
ஆட்கள் வைத்து தாக்கப்பட்ட சுகுமார் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.