சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வாடகை அல்லாத சொந்த குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும் சொத்துவரி உயர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன.
பின்னர் வாடகை, வாடகை அல்லாத குடியிருப்பு கட்டடங்கள் அனைத்திற்குமே சொத்து வரி 50 சதவீதம் மிகாமல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து சொத்து வரி உயர்வினை குறைக்கக்கோரி கோரிக்கைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பெறப்பட்டு வந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் அடிப்படையில், உயர்த்தப்பட்ட சொத்து வரி மறுபரிசீலனை செய்ய ஏதுவாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குனர், சென்னை மாநகராட்சி ஆணையர் அடங்கிய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், சொத்துவரி உயர்த்தப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் முன்பிருந்த சொத்துவரியே வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
இதையும் படிங்க...கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி!