சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 1) எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பின் அடிப்படையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.84.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஆயிரத்து 937 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. எனவே, 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரத்து 118.50 ஆகவே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மே 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டது.
இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் சென்னையில் 2 ஆயிரத்து 21.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த மாதமும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. மேலும், நடப்பு நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் 1ஆம் தேதி 92 ரூபாய் குறைக்கப்பட்டது.
இதனால் அப்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் சென்னையில் 2 ஆயிரத்து 192.50 ஆக விற்கப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்திலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு உடைய கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.
இதன்படி, கடந்த மார்ச் 1இல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது வரை ஆயிரத்து 118.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டரின் விலை 350.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை, ஹோட்டல் உரிமையாளர்கள் உள்பட பல்வேறு தொழில் புரிவோரை வெகுவாக பாதித்தது. மேலும், சமையல் எரிவாயுக்கான மானியம் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், 376வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அமுலின் வருகை லாபமா? நட்டமா? ஆந்திராவில் நடப்பது என்ன?