கடலோர ஆராய்ச்சி கப்பல் அன்வேஷிக்கா கடல்சார் தகவல்கள் பெறுவதற்காகவும், சுனாமி தொடர்புடைய தகவல்களை பெறுவதற்கும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் வரைவும், 496 டன் எடையும் கொண்ட இந்த கப்பல், 8 விஞ்ஞானிகளும் 12 பணியாளர்களும் 15 நாட்கள் தொடர்ந்து தங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![அன்வேஷிக்கா கப்பல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10182720_ship.jpg)
இந்த கப்பலில் அதி நவீன கடல் ஆராய்ச்சி உபகரணங்களும், 2 ஆய்வுக் கூடமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் ஆய்வுகளுக்கு விசாலமான பணித்தளம் கொண்டது. இது கடல் கடல்சார் மற்றும் வளிமண்டலம் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்கும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்விளக்கம் தருவதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், Drop Keel வசதி இருப்பதல் கப்பலின் சென்சார்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் கப்பலை நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லாமலே இதனை சரி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த கடலோர ஆராய்ச்சி கப்பல் சாகர் அன்வேஷிக்கா 2020ஆம் ஆண்டு புவி அறிவியல் அமைச்சகத்தில் மற்ற கப்பல்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியது.
![கடலோர ஆராய்ச்சி கப்பல் அன்வேஷிக்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10182720_shjd.jpg)
சாகர் அன்வேஷிக்கா ஆராய்ச்சிக் கப்பலானது இதுவரை 12க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி பயணங்களை மேற்கொண்டுள்ளது. இந்த கப்பல் இந்தியா முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தேசிய கடல் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் பற்றி கடல் கண்காணிப்பு திட்ட இயக்குநர் ஆர்.வெங்கடேசன் பேசுகையில், "41 கருவிகள் கொண்ட இந்தப் கப்பல் 2 ஆய்வுக் கூடங்களைக் கொண்டது. கடல்சார் தகவல் பெறுதல், கடற்கரை படுக்கைகள் கண்காணிப்பு, 3டியில் கடல் ஆழத்தை கணக்கிடுதல் (bathymetry), கடலில் மாதிரிகள் எடுப்பது போன்ற பணிகளை செய்ய முடியும்.
சுனாமி பாதிப்பு குறித்து கூடுதல் தகவல்களைப் பெறவும் இந்த ஆராய்ச்சி கப்பல் பயன்படுத்தப்படும். இதன்மூலம், கடலுக்கு அடியில் உள்ள தளம் மற்றும் நுண்ணுயிர்களை ஆய்வு செய்ய முடியும், கடல் மட்டத்தை, கடல் படுக்கைக்கு அடியில் ஒரு மீட்டர் அளவுக்கு பார்க்கும் ஆழத்தை கணக்கிட முடியும். புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை மனிதர்களால் கடலில் ஏற்படும் மாசு ஆகியவற்றை கணக்கிட முடியும். இந்தக் கப்பல் தேசிய கடல் தொழில் நுட்பக் கழகத்தில் கீழ் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "வானிலை கணிப்பில் உலகில் 4 இடங்களுக்குள் இந்தியா உள்ளது. நாம் விரைவாகவும், உடனடியாகவும் வானிலை மாற்றங்களைக் கண்டறிந்து வருகிறோம். இதற்கு முன் 2 வாரத்துக்கு முன்னாள் கூட புயல்கள் வருகை கணிக்கப்பட்டது. அமெரிக்க, ஜப்பான் மட்டுமே நம்மைவிட சற்று முன்னிலையில் உள்ளன. இது நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பலனிக்கும்.
![மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10182720_sip2.jpg)
இது போன்ற வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சிக்கு செலவிடும் பணத்தால் விபத்துக்களினாலும், இயற்கை சீற்றங்களாலும் சேதமடையும் பணத்தில் 50 விழுக்காடு வரை சேமிக்க முடியும். 2004 சுனாமி வந்தபோது அதனை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது சுனாமியை முன் கூட்டியே கணிப்பதில் உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது.
கடல் மூலம் குடிநீர் பெரும் திட்டம், கடல் மூலம் எரிசக்தி பெரும் திட்டம், கடலில் இருந்து மெனீசியம், கோபால்ட் போன்ற கனிமங்களை எடுப்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்படும். 2019 கரோனா தொற்றுக்கான ஆண்டாகப் பார்க்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அது அறிவியலின் ஆண்டு என்பேன். மனித குலம் சந்தித்த பல்வேறு சவால்களையும் விஞ்ஞானிகள் எதிர்கொண்டனர்" என்றார்.