தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக்கட்சி குழுக் கூட்டம் இன்று(மே.22) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
அப்போது, மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை குறித்து அனைத்துக்கட்சி கருத்துகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், " கரோனா பெருந்தொற்றை ஒழிக்க வேண்டும் என்பது ஒன்றே நமது இலக்காக இப்போது இருக்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து நாம் இங்கு கூடியிருக்கிறோம். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு, அதன் பரவல் சங்கிலியை உடைப்பதே முக்கியமானது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமானது ஆக்ஸிஜன் தேவை. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும், தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன்படி தமிழ்நாட்டிற்கான 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்திலிருந்து தினந்தோறும் 100 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பெறப்பட்டு வருகிறது. விமானங்கள் மூலம் காலி டேங்கர்கள் அனுப்பப்பட்டு, ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்துள்ளதே தவிர, கட்டுக்குள் வரவில்லை. மக்களின் பாதுகாப்பிற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது விடுமுறை காலம் அல்ல, கரோனா காலம். பொதுமக்கள் இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை தரக்கூடாது. பள்ளிகள், கல்லூரிகளை இன்னும் எத்தனை நாட்கள் மூடியே வைத்திருப்பது. கரோனா லாக்டவுன் நாட்களில், விடுமுறை போல ஊர் சுற்றக்கூடாது
தமிழ்நாட்டில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை அளித்துள்ளனர். இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.