சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,சென்னை அண்ணா சாலை உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான "மின்னகம்" சென்று ஆய்வு மேற்கொண்டார்.
"மின்னகம்" மின் நுகர்வோர் சேவை மையம், தமிழ்நாடு முதலமைச்சரால் 2021 ஜூன் 20 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்நாடெங்கும் உள்ள மின் நுகர்வோர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மின்னகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தில் பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான பெயர் மாற்றம், மின்விநியோகத்தில் தடை, விகிதப்பட்டியல் மாற்றம், மின் கட்டணத்தில் உள்ள சந்தேகங்கள் உள்ளிட்ட அனைத்து புகார்களை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மின்னகத்தின் தலைமையகமான சென்னையில் முறைப்பணி ஒன்றிற்கு 65 நபர் வீதம் மூன்று முறைப்பணிகளாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கி வரும் 44 மின் பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றிற்கு நான்கு பேர் வீதம் 176 நபர்களை கொண்டும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மின்னகத்தின் அலைபேசி எண்ணான 94987 94987-ல் பொதுமக்கள் 24x7 மணி நேரமும் புகார்களை அளிக்கலாம்.
இந்த ஆய்வின் போது, மின்னகத்தில் புகார் அளித்தவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இம்மின்னகத்தில் இதுவரை 10,50,282 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அவற்றில் 10,41,872 புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மொத்தத்தில் 99% புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டு மக்களின் மின்துறை சார்ந்த குறைகளை தீர்ப்பதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, அன்றைய தினமே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னகத்திற்கு வரும் பொதுமக்களின் அழைப்புகளுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒப்புகை அளிப்பதோடு, குறைகள் தீர்வு காணப்பட்டவுடன் அதுகுறித்தும் பொதுமக்களிடம் அலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதி வாரியாக செயற்பொறியாளர் ஒருவரும், அமைச்சர்களின் தொகுதிகளில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொறியாளர்களும் நியமிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மின்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்