சென்னை: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் ஆறு கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகக் கட்டடம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில், முட்டுக்காட்டில் எட்டு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடம், ஜீயபுரத்தில் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணை வளாகத்தில், ஐந்தாயிரத்து 100 வளரும் கோழிகள், ஒன்பதாயிரத்து 150 முட்டையிடும் கோழிகளைப் பராமரிக்கும் வகையிலும், ஒவ்வொரு வாரமும் சுமார் 20 ஆயிரம் எண்ணிக்கையில் ஒருநாள் வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் கோழிக்குஞ்சுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதால் நாட்டுக்கோழிக்குஞ்சுகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

முட்டுக்காட்டில் மீன்வளர்ப்புத் தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடம், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 30,010 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தில் வகுப்பறைகள், கருத்தரங்கு அறை, ஆசிரியர், பணியாளர் அறை, நூலகம், அருங்காட்சியகம், அலங்கார மீன் வளர்ப்பகம், மீன் உணவு தர பகுப்பாய்வு ஆய்வகம், நீர் தர பகுப்பாய்வு ஆய்வகம், நுண்ணுயிரியல் ஆய்வகம், மீன் நோய் கண்டறிதல் ஆய்வகம், இளநிலை, முதுநிலை மாணவர்கள் ஆய்வகம், தேர்வு அறை, கணினி அறை ஆகியவை அமைக்கப்பெற்றுள்ளன.
ஜீயபுரம் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டடத்தில், தரை, முதல் தளம் ஆகியவற்றுடன் 11,730 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இதில் நன்னீர் அலங்கார மீன்களுக்கான பொரிப்பகம், நாற்றங்கால் வளர்ப்பு வசதி, ஆய்வகங்கள், பயிற்சி அரங்குகள், கணிணி அறை, நூலகம் ஆகியவை அமைந்துள்ளன.

இங்கு நன்னீர் அலங்கார மீன்களின் வளர்ப்பை பரவலாக்குதல், விலை உயர்ந்த நன்னீர் அலங்கார மீன்களை வளர்க்கும் மீன் வளர்ப்பாளர்களுக்கு சிறந்த தரமான சினை மீன்களை உற்பத்தி செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் 2020-21ஆம் ஆண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத்தொகையான ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, 2020-21ஆம் ஆண்டுக்கான பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய தொகையான 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை முதலமைச்சரிடம், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை, கூடுதல் தலைமைச் செயலர் ஜவஹர் உள்பட பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அசைவ, மதுப்பிரியர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் நாள் மாற்றியமைப்பு