சென்னை: அரசு முறை பயணமாக நான்கு நாள்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், கே.என். நேரு, ரகுபதி, மதிவேந்தன், செந்தில் பாலாஜி, த.மோ. அன்பரசன், தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜீவால், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக துபாய், அபுதாபி போன்ற நாட்டிற்கு சென்று வந்துள்ளேன். எனது பயணம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. துபாய் எப்படி ஒரு பிரம்மாண்டமான நாடக உருவாகி இருக்கிறதோ அதேபோல் எனது பயணமும் மிக பிரம்மாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். ஆறு மிக முக்கிய தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் போடப்பட்ட ஆறு முக்கிய நிறுவனங்கள் பெயர் பட்டியல்
- இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- ஜவுளிதுறை சார்ந்த ஒயிட் ஹவுஸ் (WHITE HOUSE) நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- உணவு துறை சார்ந்த TRANSVEL குழுமத்தோடு ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- மருத்துவத்துறை சார்ந்த AASTAR TM Health care நிறுவனத்தோடு 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த SHERAF நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு 3ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த 6 நிறுவனத்தோடு 6 ஆயிரத்து 100கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது..இந்த ஒப்பந்தம் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக போகிறது..எனவே இந்த பயணம் ஒரு வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது.
துபாய், அபுதாபி நாட்டின் முக்கியமான துறை சார்ந்த அமைச்சர்களையும்,அரசு சார்ந்த அலுவலர்களையும், பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து உரையாற்றி இருக்கிறேன். சிறு துறைமுகங்கள் மேம்பாடு,உணவு பதப்படுத்துதல்,தொழில் பூங்காக்கள் உருவாக்ககூடிய திட்டங்களில் முதலீடு செய்திட முன்வந்து உள்ளார்கள்.தமிழகத்தில் தொழில் முதலீடுகான சூழல் இருப்பதை நான் எடுத்து கூறியுள்ளேன்.
ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்கள் : தொடர்ந்து அடுத்தடுத்து பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. நான் சந்தித்த அனைவரையும் தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களின் வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்களாக தான் இருந்தது.
ஆனால் நாங்கள் ஒப்பந்தம் போட்டதோடு அவர்கள் இங்கு வந்து தொழில் தொடங்க நடவடிக்கை துரிதப்படுத்த முதலமைச்சர் அலுவலகத்தில் பலகை வைத்து (dash board) ஆய்வு நடத்தி அந்த தொழிலை தொடங்கி நல்ல சூழலை உருவாக்கப் போகிறோம்.
துபாய் நாட்டில் கொடுத்த வரவேற்ப்பு என்னை தமிழ்நாட்டில் இருந்த உணர்வை தான் எனக்கு கொடுத்தது.அந்தளவு உற்சாகமான வரவேற்பை எனக்கு அளித்தார்கள். எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்க்கட்சி அப்படி தான் கூறுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது!