சென்னை: கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற, ‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
நினைவுப்பரிசு: இந்நிகழ்வில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் சிவன், சந்திராயன் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, விஞ்ஞானிகள் நாராயணன், இராஜராஜன், சங்கரன், வனிதா, ஆசிர் பாக்கியராஜ் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
நினைவுப்பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பயின்ற பள்ளி, குடும்பப் பின்னணி குறித்த விவரங்களுடன் அவர்களைக் குறித்த ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, “இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் ஒன்பது பேர் இந்த மேடையில், அமர்ந்திருப்பது என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு: கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு - வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் – மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாடிய மகாகவி பாரதியார் இப்போது இருந்திருந்தால்,
“இஸ்ரோ சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் பிறந்த தமிழ்நாடு, நாராயணனும், சங்கரனும், ராஜராஜனும், ஆசீர் பாக்கியராஜும், வனிதாவும், நிகார் ஷாஜியும் பிறந்த தமிழ்நாடு, வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு” என்று பாராட்டிப் போற்றியிருப்பார்.
விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள்: அந்தளவுக்கு உலகத்துக்கே இந்தியாவின் பெருமையை உணர்த்துகின்ற தமிழர்களாக நீங்கள் இங்கே உயர்ந்து நிற்கிறீர்கள். ஆகஸ்ட் 23ஆம் நாள் இந்தியாவுக்கு மட்டும் இல்லை, உலகத்துக்கே முக்கியமான நாள். நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திரயான் விண்கலத்துடன் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள். 1959ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013 ஆம் ஆண்டு சீனாவும் தான் இந்தச் சாதனையைச் செய்திருக்கின்றனர்.
2008 ஆம் ஆண்டு நிலாவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023 ஆம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது. அதாவது நிலாவைத் தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென் துருவப் பகுதியைச் சந்திரயான்-3 தரையிறங்கி ஆராயத் தொடங்கியிருக்கிறது.
அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த, அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை. சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாகப் பரவியது. இப்படிப்பட்ட பெருமையைத் தமிழ்நாட்டுக்குத் தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்கள் எல்லோரையும் தமிழ்நாடு முதலமைச்சராகக் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
தமிழர்களுடைய வானியல் அறிவு: தமிழ் அறிவு என்பதே அறிவியல் அறிவு தான். எதையும் பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவு தான் தமிழறிவு. நிலம், தீ, நீர், வளி விசும்போடு ஐந்தும் என்று அன்றைக்குச் சொன்னது தொல்காப்பியம். நிலம், தீ, காற்று, நீர், வானம் ஆகிய ஐந்தும் கலந்தது தான் உலகம் என்று சொல்லியிருக்கிறது. நில அமைப்பை ஐந்தாகப் பிரித்து, பொருளை மூன்றாகப் பிரித்து வாழத் தொடங்கிய இனம் நம்முடைய தமிழினம். இதில் தமிழர்களுடைய வானியல் அறிவு தனித்தன்மை வாய்ந்தது.
விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழ்நாட்டின் அறிவாக இருந்தது. அதுதான் இந்த அறிவியல் மேதைகளை உருவாக்கி இருக்கிறது. இன்னும் சொன்னால், இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிகப் பெருமைக்குரியது. மிகமிகச் சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள்.
வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்: அதிலும் குறிப்பாக 2 பேர் பெண்கள். இந்த மேடையே சமூகநீதியின் அடையாளமாக இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்கள் தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
டாக்டர் கே.சிவன் - கன்னியாகுமரி மாவட்டம், சரக்கல்விளை என்ற ஊரில் பிறந்தவர். 1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து, 2018 ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக உயர்ந்த ஆற்றலுக்குரியவர். பி.எஸ்.எல்.வி மூலம் 104 விண்கலங்களுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ராக்கெட் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்ற மென்பொருளை உருவாக்கியவர். சந்திரயான் - 2 முழு வெற்றி அடையாத நிலையில், அவர் கண்கலங்கிய காட்சிகள் தான், ஆற்றிய பணிகள், அதன் மேல் அவர் வைத்திருந்த மாறாத பற்றின் அடையாளமாக வெளிப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
மயில்சாமி அண்ணாதுரை – பொள்ளாச்சி அருகில் கோத்தவாடி என்ற கிராமத்தில் பிறந்தவர். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றியவர். மூன்றாண்டுக் காலம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் திட்ட இயக்குநராக இருந்தவர். பல்வேறு விண்கலங்களைச் செலுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். சந்திரயான் - 1 வடிவமைப்பில் இந்தியக் கொடியைப் பொருத்தியவர் இவர். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து விண்ணைத் தொட்டவர்.
வி.நாராயணன் – குமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருவனந்தபுரம் திரவ உந்துசக்தி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இஸ்ரோ தயாரித்த பெரும்பாலான ராக்கெட் தயாரிப்புகளில் இவருடைய பங்கு அளப்பரியது. சந்திரயான் - 3 விண்ணில் செலுத்தப் பயன்படுத்திய மார்க்-3 ராக்கெட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானி விருதை இரண்டு முறை பெற்றவர்.
ஏ.ராஜராஜன் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்ரோவில் வெளியீட்டு அங்கீகார வாரிய தலைவராக இருக்கிறார். ககன்யான், எஸ்.எஸ்.எல்.வி போன்ற இஸ்ரோவுடைய விரிவடைகின்ற தேவைகளுக்குத் திடமான மோட்டார்கள் தயாரிப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இஸ்ரோ மெரிட் விருதை 2015 ஆம் ஆண்டு பெற்றவர்.
எம்.சங்கரன் – திருச்சியில் பிறந்தவர். யு.ஆர்.ராவ் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர். சந்திரயான் 1,2,3 – ஆகிய மூன்று திட்டங்களிலும் அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றி இருக்கக்கூடியவர். சூரியனைப் பற்றி ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்தியா எல் -1 என்ற விண்வெளி திட்டத்திலும் பணியாற்றியவர். தொழில்நுட்பக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்களில் ஒருவர்.
ஆசீர் பாக்கியராஜ் – தூத்துக்குடியில் பிறந்தவர். ராக்கெட் இஞ்சின் – விண்கல இயந்திரங்களின் உயர் சோதனைத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ராக்கெட் நிலை ஒருங்கிணைப்புகளில் நவீன வசதிகளை நிறுவியவர். G.S.L.Vயை இவருடைய குழுதான் ஒருங்கிணைத்தது. உயர் தொழில்நுட்பங்களை இணைப்பதில், இவருடைய பங்களிப்பு முக்கியமானது.
டாக்டர் எம்.வனிதா - சென்னையைச் சேர்ந்த இவர் சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக இருந்த பெருமைக்குரியவர். மங்கல்யான் வடிவமைப்பிலேயும் முக்கியப் பங்காற்றியவர். இஸ்ரோவில் திட்ட இயக்குநராக பணியாற்றிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர். சிறந்த பெண் விஞ்ஞானி விருதையும் பெற்றவர்.
டாக்டர் நிகார் ஷாஜி - தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர், 1987 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் சூரியன் ஆய்வுத் திட்டமான ஆதித்தியா எல் 1 திட்டத்தினுடைய திட்ட இயக்குநராகச் செயலாற்றினார்.
டாக்டர் வீரமுத்துவேல் - விழுப்புரத்தில் பிறந்தவர் இவர், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் நாள் ஏவப்பட்ட சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றிகரமான இயக்குநர். அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்த ஒரு ஆவரேஜ் மாணவன். அடுத்து எங்கே படிக்கவேண்டும், என்ன படிக்கவேண்டும் என்று எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல், அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் யாரும் படித்தவர்கள் இல்லை என்று சொல்கின்ற அளவிலான பின்புலத்தில் பிறந்து சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்: இதில் தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன பெருமை என்றால் சந்திரயான் – 1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. 2008 அக்டோபர் 28 ஆம் நாள் அது நிலவைச் சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க் கூற்றுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது. சந்திரயான்- 2, 2019 ஜூலை 15 ஆம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலகட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் இருந்தார்.
இப்போது ஏவப்பட்டது சந்திரயான் - 3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதுதான் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த பெருமையைத் தமிழ்நாடு அரசு போற்றும் விதமாக, இரண்டு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த ஒன்பது பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் முதல்வன் திட்டம்: உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவுமில்லை. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தின் அடையாளமாகத்தான் தமிழ்நாடு அரசு இந்தத் தொகையை வழங்கியிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு, மென் மேலும் இந்தியாவிற்கு நீங்கள் பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவது அறிவிப்பு என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.
தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கின்ற திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக அப்படி உருவாக்கத்தான் நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறோம். சென்ற ஆண்டு மட்டும் 13 லட்சம் பேருக்குப் பயிற்சி வழங்கி இருக்கிறோம். 10 இலட்சம் என்று இலக்கு வைத்திருந்தோம். ஆனால் 13 இலட்சம் பேருக்குப் பயிற்சி வழங்கியிருக்கிறோம்.
மாணவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்குத் தொழில் தொடங்க வருகின்றனர். அதற்குத் தகுதியானவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிக மிகப் பொருத்தமாக அமையும் என்று கருதுகிறேன்.
பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதி: பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பைத் தொடர்கின்ற 9 மாணவர்களுக்குச் சாதனை விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை வழங்க இருக்கிறோம்.
இதன் மூலம் அவர்களுக்குக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தக் கல்வி உதவித் தொகைக்காக, பத்து கோடி ரூபாயில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் இந்த ஒன்பது பேரைப் பாராட்டுவது மட்டும் இல்லை.
நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம்: அவர்களைப் போல ஆளுமைகள் இன்னும் அதிகமாக உருவாகவேண்டும் என்றும், ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் இந்தப் பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் இந்த திராவிட மாடல் அரசின் இலக்கு. அந்த வகையில், இங்கே அமர்ந்திருப்பவர்கள் அறிவியலாளர்களாக மட்டும் இல்லை.
அறிவியல் வழிகாட்டிகளாகவும் இருக்கின்றனர். பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தொய்வின்றி தொடரட்டும். சூரியன் பற்றியும் – நிலாவைப் பற்றியும் எல்லா ஆய்வுகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். மனிதரை விண்வெளிக்கு அனுப்புகின்ற வரை அனைத்து அறிவியல் முயற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறட்டும். இந்திய நாட்டைக் காப்போம். நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி: சென்னையில் தமிழக ஆளுநர், முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!