சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், மார்ச் 12 ஆம் தேதி குளச்சலில் நடைபெற்ற ஊர்வலத்தில் காவல் துறை நடத்திய தடியடி குறித்து சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்திய தினமான மார்ச் 12ஆம் தேதியன்று, குளச்சல் சந்திப்பிலிருந்து இரணியல் சந்திப்பு வரை இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்த முயன்றனர். இதற்கு அனுமதி தராத காவல் துறையினர் ஊர்வலம் செல்ல முயன்றவர்களைத் தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊர்வலம் செல்ல அனுமதி கோரிய பகுதி சாலைப் போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதாலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும், காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
ஆனால், அனுமதி மீறி லாரன்ஸ் என்பவர் தலைமையில் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, காவல் துறையினரை தாக்கியும் தகாத வார்த்தைகளால் பேசியும் இருக்கின்றனர்.
இதனால் நான்கு காவலர்கள் காயம் அடைந்துள்ளனர் எனவும், காவல் துறை தடியடி நடத்தவில்லை. தடையை மீறியதால்தான் லாரன்ஸ் உள்பட 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ. குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்' - ஸ்டாலின்