தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் உயர் மின் அழுத்த தொடரமைப்புக்கான உயர்மின் கோபுரங்கள் விவசாய விளை நிலங்கள் வழியாக அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாய விளை நிலங்களை தவிர்த்து, மாற்றுவழியில் மின் தொடரமைப்பு அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கின்றனர். இந்தக் கோரிக்கை மீது ஒரு தீர்வு காணப்படாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அமைதி வழி மறியல் அறப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழ்நாடு அரசின் மின்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சர் எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டி, மக்கள் கவனத்தை திசை திருப்பும் மலிவான அரசியலில் ஈடுபட்டிருப்பது வேதனையானது.
கேரள மாநிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அது விவசாய விளை நிலங்களில் அமைக்கப்படவில்லை என்பதையும், விவசாயிகள் கேட்டுக்கொண்ட பகுதிகளில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட கம்பிவடப் பாதையாக அமைக்கப்பட்டிருப்பதையும் ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் புதிராக இருக்கிறது.
எதுவாயினும் சரி, விவசாயிகள் பாதிப்பு என்பது அரசியல் தொடர்புடையது அல்ல என்பதையும், விவசாயிகள் கோரிக்கைளை அரசு அலட்சியம் செய்வது விவசாயிகளைப் போராடத்திற்கு நிர்பந்திக்கிறது என்பதையும் அரசும், அமைச்சரும் உணர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. உயர்மின் கோபுரங்கள் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசி தமிழ்நாடு அரசுத் தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'வேண்டாம்... வேண்டாம்... உயர்மின் கோபுரம் வேண்டாம்!'