சென்னை: 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. இதற்கான இறுதிப்போட்டி வருகிற 12ஆம் தேதி நடைபெறும். சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது, ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு உள்ளது. மேலும், 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி அணி இன்று (ஆகஸ்ட் 9) மோதவுள்ளதால் இந்த ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக ஹாக்கி ரசிகர்கள் தெரிவிக்கிறனர்.
மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தின் புதிய அம்சங்கள்: ரூ.16 கோடி செலவில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் அமர்வதற்கு பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் நூற்றாண்டு ஸ்டாண்டை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தலைநகரில் 25 ஆண்டுகளுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் மோதல்: ஹாக்கி தொடரைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக இருந்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற 6 சர்வதேச தொடர்களில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைபட்டதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. கடைசியாக 1998இல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதே சென்னை மைதானத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு விளையாடின. 25 ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் சென்னையில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ள இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2023 ஒருநாள் உலகக்கோப்பை:18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!
தரவரிசை பட்டியல்: 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையில் இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது நடைபெற்ற 4 லீக் போட்டியில் இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிரா என்ற கணக்குடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், மலேசியா அணி 4 போட்டியில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் தென்கொரியா ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என 5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தான் ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 4வது இடத்திலும் உள்ளன. ஜப்பான் 2 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், சீனா ஒரு புள்ளியுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றன.
ஒருவேளை பாகிஸ்தான் வெற்றி பெற்றால்? இந்திய அணி நடப்பு போட்டியில் வெற்றிக்கனியை மட்டுமே ருசித்து வருகிறது. ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, எந்த வித நெருக்கடியும் இல்லாமல் இன்றைய ஆட்டத்தை சந்தித்த உள்ளது.
இதுவரை நடைபெற்ற லீக் போட்டியில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது, பாகிஸ்தான் அணி. அதனால் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி அதிகமாகவே இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதேபோல் ஜப்பான் - சீனா ஆட்டத்தில், சீனா வென்றால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
பாகிஸ்தான் அரையிறுதி ஆட்டத்திற்குச் சென்றால், இறு அணிகளும் மீண்டும் அரையிறுதியில் நேருக்கு நேர் சந்திக்கும்.
விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு போட்டி என்றாலே உணர்வுப்பூர்வமான தாக்கும் இருக்கும். அது கிரிக்கெட் என்றாலும் சரி, ஹாக்கி என்றாலும் சரி. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டாவது நாளே முழுவதும் விற்பனையானது என்பது குறிப்பிடதக்கது.
முதலமைச்சர் வருகை: பரபரப்பு நிறைந்த இந்த கடைசி லீக் ஆட்டத்தை, சென்னை ஏழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்.
இதையும் படிங்க: IND vs WI: சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம்.. குல்தீப் யாதவ் சாதனை.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!