சென்னை: இந்தியாவின் சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுமைக்கு பரவுமானால், அதை விட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது. கூட்டாட்சி இந்தியாவில் இணைந்திருக்கும் மாநிலங்கள், சுயாட்சி உரிமை கொண்டதாகச் செயல்பட வேண்டும் என அண்ணாவும், கருணாநிதியும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள். மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி, மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும். மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாடு, பல்வேறு இனம் - மொழி - மதம் - பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர வேண்டும்.
சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் – சமதர்மம் - மதச்சார்பின்மை - ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
அத்தகைய சமத்துவ, சமதர்ம, சமூக நீதி இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்” என பேசினார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாடு அரசுத் துறைகளில் 55 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் காவலர் பதக்கம், தகைசால் தமிழர் விருது, சமூக சேவை உள்ளிட்ட பலவற்றுக்கான விருதுகளை விருதாளர்களுக்கு முதலமைச்சர் நேரில் வழங்கினார்.
இதையும் படிங்க: ‘அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திலும் உரையாற்றுவேன்’ - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து பிரதமர் உரை!