சென்னை: தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து 'வர்த்தகம் மற்றும் வணிக வாரம்' நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75ஆவது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அதுமட்டுமின்றி, 'தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை' மற்றும் 'குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு' ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
வேலைவாய்ப்பு
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தொழில் துறை வளர்கிறது என்றால் அனைத்து துறைகளும் வளர்கிறது என்று பொருள். அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற கண்காட்சிகள் நடத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2,120 கோடி மதிப்பில் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஏற்றுமதியாளர்களுக்கும் , முதலீட்டாளர்களுக்கும் அனைத்து ஆதரவுகளையும் அரசு வழங்கும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்தியா முழுவதும் பரந்து உள்ளது. உலகம் நோக்கி நாம் செல்ல வேண்டும். உலகம் நம்மை நோக்கி வர வேண்டும். 1.93 லட்சம் ஏற்றுமதியில் இந்தியாவில் 3ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருள்கள்
தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருள்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. காஞ்சி ஆரணி பட்டு சேலைகள் , திண்டுக்கல் பூட்டு சிறுமலை வாழைப்பழம் உள்ளிட்ட பொருள்களுக்கு வெளிநாடுகளில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது . இவற்றை அதிக அளவில் தயாரித்து, தரம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொடர்பான இடர்பாடுகளைக் களைய ஏற்றுமதி அமைப்பு ஒரு உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், ஆம்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏற்றுமதி இடங்கள் மேம்படுத்தப்படும். 'Made in India போல உலகின் மூலை முடுக்கெல்லாம் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்'.
வேளாண் ஏற்றுமதி சேவை மையம்
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி சேவை வர்த்தகத்தின் மூலம் உலக வர்த்தகம் பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. திருச்சி - நாகை மாவட்டங்கள் வேளாண் தொழிலுக்கான பெருவழி தடமாக உள்ளது. வேளாண் ஏற்றுமதி சேவை மையம் அமைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: காந்தியின் சகிப்புத்தன்மை நமது பாதையாகட்டும் - ஸ்டாலின்