சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுர இல்லத்திற்கு வருகை தந்து, தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். அதுமட்டுமல்லாமல் காலை முதலே, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் பலர் கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து ஆசிபெற்றனர்.
முதலமைச்சர் வந்த ஒரு பத்து நிமிடத்திற்குப் பின் மு.க.அழகிரியும் வருகை தந்து, தனது தாயாருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே நேரத்தில் குடும்ப நிகழ்வுக்கு வருகை தந்து கலந்து கொண்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகும் இரண்டு ஆண்டுகளாக பலமுறை இருவரும் சந்திக்க வாய்ப்புகள் அமைந்த சூழலிலும் இவர்களின் சந்திப்பு நடைபெறவில்லை. முதலமைச்சரான பிறகு முதலமைச்சர் இரண்டு முறை மதுரை சென்ற போது, இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அன்றும் சந்திப்பு நடைபெறவில்லை.
நீண்டகாலமாக இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளாத நிலையில், இன்று தங்கள் தாயாரின் 90வது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்க, ஒரே நேரத்தில் வருகை தந்து, வீட்டிற்குள் சென்ற இருவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டுக்குள் இருந்த நிலையில், அதன் பிறகு தனித்தனியே புறப்பட்டுச் சென்றனர்.
ஒரே நேரத்தில் இருவரும் வீட்டிற்குள் சென்றபோதிலும் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
தனது பாட்டியான தயாளு அம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, ''முதலமைச்சரும் மு.க.அழகிரியும் சந்தித்து பேசிக்கொண்டார்கள். அவர்கள் சண்டையிட்டார்கள் என்று யார் சொன்னார்கள், சமாதானம் அடைவதற்கு'' எனக் கூறினார். மேலும், மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அது பற்றி எனக்கு தெரியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.
நீண்ட காலமாக மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் எந்த ஒரு நிகழ்விலும் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று கலந்து கொண்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளகியுள்ளது.
இதையும் படிங்க :தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது - அண்ணாமலை விமர்சனம்