சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரியும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடக் கோரியும், இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை ஒன்றிய அரசு விரைந்து காண வேண்டுமென்று வலியுறுத்தியும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தைச் சேர்ந்த என்.ஜே.போஸ், பி.சேசுராஜா, ஆர்.சகாயம் ஆகியோர் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரனை இன்று (அக்.31) நேரில் சந்தித்து, முதலமைச்சர் எழுதிய கடிதத்தினை வழங்கினர்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த சில மாதங்களாக இதுபோன்று தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் IND-TN-10-MM-860, IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717 மற்றும் IND-TN-10-MM-717 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், அக்.28 ஆம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு, அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். நமது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள நிலையில், இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருப்பதை ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நன்கு அறிவார்.
இந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.
எனவே, இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், எவ்வித காலதாமமுமின்றி, உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்றோம். மேலும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தினைப் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், இதுகுறித்து முதலமைச்சர் கடிதம் ஏற்கெனவே தங்களது துறைக்கு வந்துவிட்டதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அதிகாரிகளுடன் இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.