சென்னை: திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. மாநாட்டை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இளைஞரணி மாநாடு 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாநாடாக இருக்க வேண்டும்.
கூட்டணியை, தொகுதி பங்கீட்டை தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ, அவரே நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக இருப்பார். இவர்தான் இந்த தொகுதிக்கு என்ற உறுதி எதுவுமில்லை” என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.