சென்னை: கரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
உச்சத்தில் இருந்த நோய்த்தொற்று படிப்படியாக குறைந்தது. கரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கரோனா விழிப்புணர்வு
இதனிடையே கடந்த இரண்டு நாள்கள் கரோனா கள நிலவரம் சற்று அதிகரித்துவருவது அச்சத்தைக் கூட்டுகிறது. இந்நிலையில் கரோனா குறித்து தீவிர விழிப்புணர்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு பரப்புரை தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை பயணத்தைத் தொடங்கி வைத்தார். கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நல்வாழ்வு துறையால் தயார் செய்யப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளையும் பார்வையிட்டார்.
விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கரோனா பேட்ஜ் வெளியிட்ட முதலமைச்சர், ‘கரோனா வெல்லும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றார். அவரோடு அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, கரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்ததுடன், எல்இடி பொருந்திய பரப்புரை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பரப்புரை வாகனம் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
மாஸ்க் அப்
இந்த விழா அரங்கில் அமைக்கப்பட்ட சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் அடங்கிய பரப்புரை கண்காட்சியில் MASK UP TN என்ற பெயரில் வைக்கப்பட்ட செல்ஃபி மையத்தில், முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் கண்காட்சியை பார்வையிட்டார்.
இதையும் படிங்க: 42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!