சென்னை: மிக்ஜாம் புயல் கனமழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, சென்னையில் முழுமையாகவும், மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் 6,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த டிசம்பர் 9 அன்று அறிவிக்கப்பட்டது.
இதன் பேரில், பயனாளிகள் பட்டியலின் அடிப்படையில் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கும் பணியானது, டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி மாலை முதலே டோக்கன்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் புயல் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட வேளச்சேரி சக்தி விஜயலட்சுமி நகரில், பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்திட்டத்தை இன்று (டிச.17) தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மற்ற பகுதிகளுக்கும் இன்று முதல் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், பயானிகளுக்கு குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில், அவர்களுக்கு குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளில் இந்த நிவாரணத் தொகையை வாங்கிக் கொள்ளலாம் எனவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவே தேதி மற்றும் குறிப்பிட்ட நேரம் குறிப்பிடபட்டுள்ளதாக ஏற்கனவே அரசுத் தரப்பில் அறிவிக்கபட்டிருந்தது.
குறிப்பாக, மிக்ஜாம் புயல் காரணமாக நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், மத்தியக் குழுவினர் கடந்த வாரம் மழையால் மிகுந்த அளவு பாதிக்ப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுச் சென்றனர்.
இதனையடுத்து, தற்காலிக நிவாரணமாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணமாக 12,659 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர், பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்னும் இரு நாட்களில் எண்ணெய் கழிவுகளை அகற்ற இலக்கு.. எண்ணூர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை!