நாளை முதல் 12ஆம் வகுப்பு துணை தேர்வு ஹால் டிக்கெட் - hsc exam hallticket
12ஆம் வகுப்பு துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை (ஜூலை.31) முதல் இணையத்திலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார்.
சென்னை : இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19வரை நடைபெறவுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி ஜூலை 23 முதல் 28ஆம் தேதி வரையிலான நாள்களில் விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள், ஏற்கனவே மே 2021இல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது துணைத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டினை 31ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண், பிறந்த தேதியினை பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவு சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
2020-2021 கல்வியாண்டுக்கு ஜுலை 19ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதி, ஆகஸ்ட் 2021 12ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கட்டாயம் அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுத வேண்டும். மேலும், அந்த மாணவர்கள் தற்போது எழுதவுள்ள துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே 12ஆம் வகுப்பு தேர்வின் இறுதியான மதிப்பெண்கள் ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொற்பனைக்கோட்டை அகழாய்வு: தொடங்கிவைத்த அமைச்சர்