பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தைக் கண்டித்து சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்தியன் ஆயில் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்று இந்தியன் ஆயில் தலைமை அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும். அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருப்பதுபோல் இந்தியாவிலும் குறைக்க வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், "இந்தியாவைவிட அவர் வறுமையில் உள்ள வங்கதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக உள்ளது.
ஆனால் வளர்ந்த நாடான இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெட்ரோல் விலை கடந்த ஆறு நாள்களில் மட்டும் ஐந்து ரூபாய் அதிகரித்து, இன்று 91 ரூபாய் 45 காசிற்கு விற்கப்படுகிறது.
கேஸ் சிலிண்டருக்கு கொடுக்கப்பட்டுவந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த மாதம் முதல் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சிக்னலில் நிற்கும்போது பெட்ரோல் டீசல் விலையால் கவலையடைய தொடங்கியுள்ளனர்.
எனவே மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் இதற்காக எழுச்சிப் போராட்டம் நடைபெறும்" என்றார்.