சென்னை: மழையின் காரணமாக சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
சென்னை, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், பெருங்களத்தூர், பம்மல், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (செப். 29) கனமழை பெய்தது.
ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், சாலைகளின் தாழ்வான இடங்களில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூவர் இறந்ததாக 100-க்கு போன் செய்து போலீசை அலைக்கழித்த இளைஞர்.. பெரம்பலூரில் நடந்தது என்ன?
குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் போன்ற பகுதிகளின் சந்தைகளில் பொருட்களை வாங்குவதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலால் மருத்துவமனைக்கு அவசர சிக்கிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
மேலும், தேங்கிய மழை நீரில் இறங்கியதால் ஜிஎஸ்டி சாலையில் சில வாகனங்கள் பழுதாகி நின்றன. மழையின் காரணமாக பழுதாகிய வாகனங்களை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபடவில்லை எனக் கூறப்படும் நிலையில் அதன் காரணமாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: பயிர் காப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதாக புகார்!