தனது குழந்தை பூமிக்கு முதல்முறையாக வரும்போது கணவனும், மனைவியும் மாறிமாறி அந்தக் குழந்தையை கொஞ்சிக் கொள்வதும் உரிமை கொண்டாடுவதும் என நாள்களை நகர்த்துவார்கள் என்றுதான் வெளிப்படையாக நினைக்கத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல, குழந்தை வளர்ப்பில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதிலும், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் தாய் மிகவும் அதிகமான சிக்கல்களைச் சந்திக்கிறாள். இந்தச் சிக்கல்களுக்கு ரத்தினச் சுருக்க விடைகளுக்காக மகப்பேறு ஆலோசகர் டீனா அபிஷேக்கிடம் பேசினோம்.
பெரும்பாலான தாய்மார்கள் சந்திக்கும் முதல் பிரச்னையிலிருந்து தொடங்கலாம் என புன்னகைத்தார் டீனா. சரி சொல்லுங்கள் எனக் கேட்டபோது, “தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பிற உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதைத் தாயுடைய குற்றமாகப் பாவிக்கக் கூடாது. குழந்தை சரியாகச் சாப்பிடவில்லை என எடுத்துக்கொள்ளுதலும் தவறு.
குழந்தைக்குப் போதுமான கலோரிகள் தாய்ப்பாலிலேயே கிடைக்கும். ஒவ்வொரு குழந்தையின் தேவைக்கும், அதன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தேவையான சத்துக்களுடன் தாய்ப்பால் சுரப்பு இருக்கும். இதை டெய்லர் மேட் என்பார்கள். குழந்தையே வேண்டாம் எனச் சொல்லும் வரையிலும் தாய்ப்பால் கொடுக்கலாம்” என்றார்.
கருவுறாமல் தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமா? - மகப்பேறு ஆலோசகர் டீனா விளக்கம் (பாகம்-1)
தாய்ப்பால் அதிகம் கொடுக்கும்போது எடை அதிகரிக்கிறது? அழகுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள் என்பது போன்ற விமர்சனங்கள் எழுகின்றன. ஒட்டுமொத்த பெண்களை இப்படி குறுகிய வட்டத்தில் அடைப்பது சரியா? எனக் கேட்டுக் கொண்டிருக்கும்போது அவசரமாக, இல்லை என மறுத்துவிட்டு பேச்சைத் தொடங்குகிறார் டீனா.
“சென்னை போன்ற நகரங்களில் 5 வயது வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி மிகுந்த உணவு தாய்ப்பால்தான் என்ற விழிப்புணர்வு பெண்களிடம் இருக்கிறது” என்றார்.
தாய்ப்பாலால் எடை இழப்பும் அதே சமயம் எடை அதிகரிப்பும் ஏற்படுகிறதே? இது என்ன மாயாஜால வித்தையா? என்றதும் மெல்லிய புன்னகையுடன், “மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. ஆரம்பக் காலகட்டத்தில் குழந்தைக்கு அதிக நீர் இழப்பு ஏற்பட்டிருக்கும். அந்தச் சமயம் குழந்தை அதிகளவில் பால் எடுத்துக்கொள்வதால் தாய் ஒரு நாளில் எவ்வித உடற்பயிற்சியுமே செய்யாமல் 500 முதல் 600 கலோரிகளை இழக்கிறாள்.
இதனைப் பதிலீடு செய்ய அவர்கள் நன்கு சாப்பிட வேண்டியது அவசியம். எவ்வளவுதான் சத்தான உணவு எடுத்துக்கொண்டாலும், முதல் 4 மாதங்கள் பிரசவித்த பெண்ணுக்கு வேகமாக எடையிழப்பு ஏற்படும். இது நாளடைவில் தலைகீழாக மாறும். குழந்தைகளின் தேவை குறைந்துவிடும், ஆனால் பிரசவித்த பெண்கள் அதிகமாகச் சாப்பிட்டுப் பழகிவிடுவார்கள். இதனிடையே, வீட்டிலும் பால் சுரப்பதற்காக நிறைய ஊட்டச்சத்தான பொருள்கள், பானங்களை எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவார்கள். இதனாலேயே பெண்களுக்கு எடை அதிகரிக்கிறது” என திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார் டீனா.
உண்மையில், ஊட்டச்சத்து பானங்களால் தாய்ப்பால் அதிகம் சுரக்காது, குழந்தைகளின் அறிவுத்திறனுக்கும் அது காரணமாகாது என பல ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாய்ப்பால் தானம் ஒரு வரப்பிரசாதம்...
அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் தாய், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் தானம் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இது பாதுகாப்பான வழிமுறை. இதனால் நோய்கள் எதுவும் பரவ வாய்ப்பில்லை. தாய்ப்பால் தானம் கொடுப்பதால் சொந்த குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாதோ என தாய் அஞ்ச வேண்டிய தேவையில்லை. தேவைக்கேற்ப ஹார்மோன் தூண்டப்பட்டு தாய்ப்பால் தானாகவே சுரக்கும். கரோனா பாதித்த தாய் தனது குழந்தைக்குப் பாலூட்டும்போது அந்தக் குழந்தைக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.
இவ்வளவு மகத்துவம் நிறைந்த தாய்ப்பால் தானத்திற்கு வரவேற்பு கிடைத்த அளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா என வினவியதும், ”இந்தத் தானம் குறித்து பெரும்பாலானோர் கேள்விப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு அதுகுறித்து முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை.
ரத்த தானம், கண் தானம் போல இல்லாமல் இந்தத் தானம் மட்டும்தான் பாலின பேதம் கொண்டுள்ளது. தாய்ப்பாலைப் பாட்டில் அல்லது பையில் சேகரித்து அதனைப் பாதுகாப்பாகச் சேமித்து தாய்ப்பால் வங்கியில் கொண்டுசேர்ப்பது நீண்ட செயல்முறை. அப்படியிருக்க, அர்ப்பணிப்புள்ள பெண்களால் மட்டும்தான் இதைச் செய்ய முடியும்.
குறிப்பாக, இன்குபெட்டரில் இருக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால்தான் சிறந்த ஊட்டம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இது ஒரு குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உயிர் சார்ந்த தானம். இதுகுறித்து இன்னுமே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
செய்ய மறந்த கதை
ஒவ்வொரு தம்பதிக்கும் தங்களது முதல் குழந்தையைப் பற்றி அளவுக்கு அதிகமான கனவுகள் இருக்கும். இதனால் குழந்தை வயிற்றிலிருக்கும் போதிலிருந்தே நினைவுகளைச் சேகரிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால்தான் என்னவோ போட்டோஷூட் உள்ளிட்ட வேலைகளில் பிஸியாகவே இருக்கின்றனர். நவீன யுகத்தில் இதற்கான ஆடம்பர தேவைகள் அவர்களைக் குழந்தை வளர்ப்பு பற்றி சிந்திக்க விடுவதில்லை.
ஆனால், குழந்தை பேறு குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளாத இக்கால தலைமுறையினர் முதலில் குழந்தை வளர்ப்பு குறித்து கற்றுக்கொள்ளுதல் மிக அவசியம். கர்ப்பக் காலத்திலேயே வீட்டிலிருக்கும் பெரியோரிடமோ, நல்ல பயிற்றுநரிடமோ குழந்தை வளர்ப்பு குறித்து தெரிந்துகொண்டால் தாய் மட்டுமில்லாமல், தந்தையும் குழந்தையைப் பராமரிக்க முடியும். இதல்லவோ எப்போதைக்கும் நீங்கா நினைவு!