சென்னை: அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வபிரகாசம்(27), இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மாங்காடு அடுத்த செருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் சர்வேஸ்வரன் என்ற மகன் உள்ள நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது மகனை லாவண்யா அவருடன் வைத்து கொண்டு உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு சிவப்பிரகாசம், லாவண்யா வீட்டிற்க்கு சென்று பார்த்த போது வீட்டில் லாவண்யா இல்லை என்றும் மகன் சர்வேஸ்வரன் இறந்து விட்டதாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் மகன் இறந்து போன தகவலை தனக்கு தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு லாவண்யா எங்கேயோ சென்று விட்டதாகவும் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீஸ் நிலையம் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவப்பிரகாசம் புகார் ஒன்றை அளித்தார்.இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஏற்கனவே தலையில் காயம் ஏற்பட்டு சர்வேஸ்வரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்து போனதால் மாங்காடு போலீசார் சர்வேஷ்வரன் உடலை பிரேத பரிசோதனை செய்து லாவண்யாவிடம் ஒப்படைத்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரையில் போலீசார் காத்திருந்தனர். மேலும் லாவண்யா மற்றும் அதே பகுதியில் வசித்து இருந்த மணிகண்டன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிறுவன் இறந்து இருப்பதாகவும் உடலில் அதிக அளவில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்த நிலையில் லாவண்யா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை அடித்து சித்திரவதை செய்ததில் சர்வேஷ்வரன் இறந்து போனது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சிவப்பிரகாசத்திற்கும், லாவண்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு குழந்தையை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய லாவண்யா, அங்கிருந்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் மீண்டும் கெருகம்பாக்கத்தில் மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு கீழ் தளத்தில் வந்து உள்ளார்.
லாவண்யாவிற்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் மணிகண்டன் செய்து தந்துள்ளார். மணிகண்டன் டிரைவர் வேலை செய்து வருவதால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் கள்ளக்காதலுக்கு சர்வேஸ்வரன் இடையூறாக இருந்ததால் வீட்டிற்கு வரும் போதெல்லாம் குழந்தை உடலில் சூடு வைப்பது, குண்டூசியால் குத்துவது மற்றும் ஆத்திரத்தில் சர்வேஸ்வரன் உடலில் எல்லாம் மணிகண்டன் கடித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தபோது சிறுவன் சர்வேஸ்வரன் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்த போது கோபத்தில் சர்வேஷ்வரனை பிடித்து தூக்கி வீசியதில் தலையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து மாங்காடு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிறுவனின் தாய் லாவண்யா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை அடித்து கொலை செய்த சம்பவம், பெரும்பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையர் அருண் தனது ட்விட்டர் பக்கத்தில் "இரண்டரை வயது குழந்தை இறந்த விவகாரத்தில் கொலை வழக்காக கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆதாரங்கள் என்றும் பொய்த்து போவதில்லை" எனவும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சூரத்தில் ஒரு 'தங்கல்' - டீ வியாபாரியின் 3 மகள்கள் தேசிய சாதனை!