சென்னை: தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு சென்னை தொல்காப்பியப் பூங்கா, கோட்டூர்புரம் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் மாடுலர் சுத்திகரிப்பு நிலையம், மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் ஜி.என். செட்டி சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, கோடம்பாக்கம் மண்டலம் காசி திரையரங்கம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை இன்று (செப். 11) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தொல்காப்பியப்பூங்கா 58 ஏக்கர் பரப்பளவில், 2008ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2011ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சீரமைப்புப்பணிகள் முற்றிலுமாக மேற்கொள்ளப்பட்டு அடையாறு நீர்நிலைப்பகுதிகளில் முதல் கட்டமாக மறுசீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டபகுதியில், தற்பொழுது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பூங்காவில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மேம்பாட்டினை உணர்த்திடும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்புப்பணிகள் மற்றும் சுமார் 2ஆயிரத்து 371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூர் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகியப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
இத்திட்டப்பணிகள் சென்னை ஐஐடி-யின் ஆலோசனையின்படி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு தலைமைச்செயலாளர் அவர்கள் இப்பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: பாரதியாருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர்