சென்னை: ஆதி திராவிடர், பழங்குடியினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.7.2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உதவித்தொகை தொய்வில்லாமல் கிடைக்கவேண்டும்
அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான Post Matric மற்றும் Pre Matric கல்வி உதவித்தொகை, உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்வி உதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தினைச் சீரமைத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிட வேண்டும்.
ஆதி திராவிடர் துணைத் திட்டம், பழங்குடியினர் துணைத் திட்டங்களின்கீழ்ச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் எனவும், இச்சட்டத்தின்கீழ் தொடரப்படும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’தமிழ் எம்.ஏ மாணவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை’: ரவிக்குமார் எம்.பி. நம்பிக்கை