சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் திருவிழாவின்போது தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி ஐந்து லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, "தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் அப்பகுதியினைச் சேர்ந்த மனோகரன் (57) மற்றும் சரவணன் (50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நான்கு நபர்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தர்மபுரி தேர் விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு...!