சென்னை: கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 ஆம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் கடந்த 13 ஆம் தேதி வெளியான நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் யார் என கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவியது. சுமார் 4 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரையும் நியமித்து காஙிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது.
இதனையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா மே 20ஆம் தேதியன்று பதவியேற்க உள்ளார். இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (மே 18) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மே 20 ஆம் தேதி அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், வரும் மே 20 ஆம் தேதி அன்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாளை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா - திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!