தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று பதவி ஏற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு, துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களுடன் கோபாலபுரம் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றார். அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், வீட்டுக்குள் சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆசி பெற்றார். தொடர்ந்து, அவரின் தந்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, மு.க ஸ்டாலின் கண்கலங்கினார். உறவினர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.